கோவை மாவட்டத்தில் செயல்படும் நூற்பாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள். (கோப்பு படம்) 
வணிகம்

‘பஞ்சு, விஸ்கோஸ், பாலியஸ்டர் விலை உயர்வால் ஜவுளித் தொழில் பாதிப்பு’ - சர்வதேச சந்தையை விட 15% அதிகம்

இல.ராஜகோபால்

கோவை: சர்வதேச சந்தை விலையை விட இந்தியாவில் பருத்தி, விஸ்கோஸ், பாலியஸ்டர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என, ஜவுளித் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள்மொழி ஆகியோர் கூறியது: பருத்தி, விஸ்கோஸ், பாலியஸ்டர் ஆகியவற்றை முக்கிய மூலப்பொருட்களாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித் தொழில் அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுதோறும் 385 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 350 லட்சம் பேல்களாகவும் தற்போது 320 லட்சம் பேல்களாகவும் குறைந்துள்ளது. தவிர சர்வதேச விலையை விட இந்தியாவில் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இன்றைய சூழலில் முதல் தர பருத்தி இந்தியாவில் ஒரு கேண்டி (356 கிலோ) ரூ.54,000 ஆக உள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில் ரூ.46 ஆயிரம் மட்டுமே. இன்றைய சூழலில் இந்திய பருத்தி விலை 15 சதவீதம் அதிகமாக உள்ளது.

பருத்தி மட்டுமின்றி விஸ்கோஸ், பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளின் விலையும் சர்வதேச சந்தையை விட இந்தியாவில் ஒரு கிலோ ரூ.30 வரை அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச நாடுகளுடன் போட்டியிட முடியாமல் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீர்வு என்ன? - மத்திய அரசு பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். தவிர விஸ்கோஸ், பாலியஸ்டர் போன்ற செயற்கை இழை பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு போன்ற கெடுபிடிகளை உடனடியாக நீக்க வேண்டும். இக்கோரிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோரிடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம்.

அண்ணாமலை உதவ வேண்டும்! - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஜவுளித் தொழில் சார்ந்த மூலப்பொருட்கள் விலை பிரச்சினையும் இடம்பெற்றது. தேர்தலில் 4 லட்சம் பேர் வாக்களித்த நிலையில், அதற்கு மதிப்பளித்து நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக ஜவுளித்தொழிலில் நிலவும் மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்று தீர்வு காண உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT