வணிகம்

சென்னை: குறைந்தபட்ச தொழில் உரிமக் கட்டணத்தை ரூ.1,000 ஆக குறைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் வணிகர்களுக்கான குறைந்தபட்ச தொழில் உரிமக் கட்டணத்தை ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா நேற்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் வணிகர்கள் அனைவரும் தொழில் உரிமத்தை, உரிய கட்டணத்தை செலுத்தி பெற வேண்டும். அண்மையில் வணிக உரிம கட்டணம் ரூ.3,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரனை ரிப்பன் மாளிகையில் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: "அண்மையில் அரசு உயர்த்தி அறிவித்திருந்த தொழில் உரிமக் கட்டணங்களை மறு ஆய்வு செய்ய முதல்வரிடமும், அமைச்சர் கே.என்.நேருவிடமும் மனு அளித்திருக்கிறோம். மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப் படுகிறது. வணிகர்களின் குறைந்தபட்ச தொழில் உரிமக் கட்டணத்தை ரூ.1,000 என நிர்ணயிக்க வேண்டும். வணிக தளப்பரப்பை குறைந்தபட்சம் 500 சதுரஅடி எனவும் அறிவித்திட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, உரிமக் கட்டணம் தொடர்பாக விரைவில் உரிய தீர்வு எட்டப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உறுதி அளித்துள்ளார். அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமைச்செயலர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாவட்ட தலைவர்கள் எஸ்.சாமுவேல், ஒய்.எட்வர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT