தேனா வங்கி மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் தணிக்கை நடத்த நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 436 கோடி ரூபாய் பணம் முறைகேடாக கையாடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை நிதி அமைச்சகம் எடுத்துள்ளது.
வங்கி கிளைகளில் இருக்கும் அதிகாரிகள் சரியான விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கிறார்கள். அதற்காக மொத்த வங்கித்துறை அல்லது குறிப்பிட்ட வங்கி சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்ட முடியாது என்று நிதிச் சேவைகள் பிரிவு செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.
சம்பந்தபட்ட நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தேனா வங்கி மும்பை கிளை யில் டெபாசிட் செய்யப்பட்ட 256.5 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்துப்பட்டிருக்கிறது.
அதேபோல ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸில் 180 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வங்கிகளை பலப்படுத்த நிதி அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துணை பொது மேலாளர், பொதுமேலாளர் பொறுப் புகளுக்கு நியமிக்கப்படும் முன்பு ரிஸ்க் நிர்வாக பயிற்சியில் கலந்து கொள்வது கட்டாயம் ஆக்கப்படும் என்று சாந்து தெரிவித்தார்.
நிதி அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையால் இந்த இரண்டு பங்குகள் சரிந்து முடிந்தது. தேனா வங்கி பங்கு 4.98 சதவீதமும், ஓரியண்டல் வங்கி பங்கு 3.58 சதவீதமும் சரிந்து முடிவடைந்தது.
சிஓஓ பதவி குறித்த பரிந்துரை வரவில்லை
ரிசர்வ் வங்கியில் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) பதவி ஏற்படுத்துவது தொடர்பாக எந்தவித பரிந்துரையும் அரசுக்கு வரவில்லை என்று நிதி சேவைத்துறைச் செயலர் ஜி.எஸ். சாந்து தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் அவருக்கு உதவியாக நான்கு துணை கவர்னர்கள் உள்ளனர். கடந்த 14-ம் தேதி துணை கவர்னர் அந்தஸ்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்திருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் மனித வள பிரிவை மாற்றியமைப்பது என்றும் இத்துறையைக் கையாள துணை கவர்னர் அந்தஸ்தில் ஒரு தலைமைச் செயல்பாட்டு அதிகாரியை நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அரசை அணுகி சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்ய பரிந்துரைப்பதென முடிவு செய்யப்பட்டது. சிஓஓ நியமிக்கப்படுவதற்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் யூனியன் தலைவர்களை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.