வணிகம்

அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலம் வெளிநாடுகளுக்கு குறைந்தக் கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி!

செய்திப்பிரிவு

‘‘ அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலமாக வெளிநாடுகளுக்கு பார்சல்களை குறைந்தக் கட்டணத்தில் ஏற்றுமதியாளர்கள் அனுப்பலாம். இந்த வாய்ப்பை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், மகளிர் தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ வளாகத்தில் அஞ்சலக ஏற்றுமதி மைய கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. இக்கண்காட்சியை தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘தமிழகத்தில் 66 அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் செயல்படுகின்றன. 540-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்சல்களை அனுப்பி உள்ளனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், மகளிர் தொழில் முனைவோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

கண்காட்சியில் தமிழ்நாடு அஞ்சலக ஏற்றுமதி மையம் மூலமாக ஏற்றுமதி செய்யும் கைவினைக் கலைஞர்கள் மற்றும் மகளிர் தொழில்முனைவோரின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், இவ்விழாவில் அஞ்சலகம் மூலமாக எளிதாக எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்பது பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், அயல்நாட்டு வர்த்தக இயக்குனர் ஜென்ரல் (டிஜிஎஃப்டி), விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் (அபெடா), இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் (ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா), கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (எச்இபிசி), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) போன்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று அஞ்சலகம் மூலமாக ஏற்றுமதி செய்யும் வழிமுறைகளை விளக்கினர்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு அஞ்சல்வட்ட இயக்குனர் கே.ஏ.தேவராஜ், உதவி அஞ்சல்துறை தலைவர் நீரஜ், அயல்நாடு அஞ்சலக பிரிவு கண்காணிப்பாளர் ஜி.கல்யாணி சுந்தரி மறறும் அஞ்சல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT