வணிகம்

தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றுக: விக்கிரமராஜா

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் காலாவதி சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலுவிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறை மற்றும் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது, பொதுமக்கள், வாகனங்கள் வைத்திருப்போர், வணிகர்கள்கள், சுங்கச் சாவடிகளுக்கு அருகில் உள்ள ஊர் பொதுமக்களை பாதிக்கிறது. தற்போது சுங்கச் சாவடிகளில் பாஸ் பெற ரூ.3 ஆயிரம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வருகிறது.

இது சிறு, குறு வணிகர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களை பாதிக்கக் கூடாது. பாஸ் கட்டணத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். காலாவதி சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் 2-வது பெரிய வர்த்தக நகரமாகும். இங்கு பல ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதி 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதால், வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மார்த்தாண்டம் சாலைகளை சீரமைக்க வேண்டும். சர்வீஸ் சாலை வழியாக அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில துணைத் தலைவர்கள் எஸ். கார்த்திகேயன், ஏ.அலெக் சாண்டர், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆர்.ஆர்.சுரேஷ்குமார், எல்.ஏ.வில்சன், டி.தானுபிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT