பங்குச் சந்தையில் இன்ப்ளூயன்சராக (செல்வாக்கு செலுத்துபவர்) உள்ள அஷ்மிதா படேலுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து ரூ.53.67 கோடியை செபி பறிமுதல் செய்துள்ளது.
பங்குச் சந்தை தொடர்பான பயிற்சி வழங்குவதில் அஷ்மிதா படேலின் குளோபல் ஸ்கூல் ஆஃப் டிரேடிங் மிக பிரபலமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஸ்டாக்ஸ் மற்றும் டிரேடிங் தொடர்பான பல்வேறு படிப்புகளை வழங்கி வந்தது. அதில், " லெட்ஸ் மேக் இண்டியா டிரேட்" (எல்எம்ஐடி), "மாஸ்டர்ஸ் இன் பிரைஸ் ஆக்சன் டிரேடிங்" (எம்பிஏடி), மற்றும் " ஆப்ஷன் மல்டிபிளையர்" (ஓம்) ஆகியவை முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெற்ற சில முக்கியமான படிப்புகளாகும்.
இந்த நிலையில், இதற்கான கட்டணமாக கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களிடமிருந்து வசூலித்து மடைமாற்றம் செய்து லாபம் ஈட்டியதாக அஷ்மிதா படேல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 42 பேரிடமிருந்து புகார் வந்ததையடுத்து செபி விசாரணையை தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, அஷ்மிதாவின் டிரேடிங் நிறுவனம் மற்றும் அவருடன் தொடர்புடைய ஐந்து நிறுவனங்களிடமிருந்து ரூ.53.67 கோடியை செபி பறிமுதல் செய்துள்ளது.
மேலும், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.104.6 கோடியை ஏன் உங்களிடமிருந்து மேலும் ஏன் கைப்பற்றக்கூடாது? என்ற கேள்விக்கு உரிய விளக்கத்தை தெரிவிக்கும்படி ஷோ-காஸ் நோட்டீசையும் செபி அனுப்பியுள்ளது.
பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசனை தொடர்பான சேவைகளை உடனடியாக நிறுத்துமாறு இடைக்கால உத்தரவையும் அஷ்மிதா படேலுக்கு செபி அனுப்பியுள்ளது. அத்துடன், பத்திர சந்தை வர்த்தகத்திலும் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.