வணிகம்

Zomato இனி Eternal: பெயர் மாற்றத்துடன் புது லோகோ வெளியிட்ட ‘சொமேட்டோ’ நிறுவனம்!

செய்திப்பிரிவு

குருகிராம்: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவின் பெயர் ‘எட்டர்னல்’ (Eternal) என மாற்றப்பட்டுள்ளது. அதன் புதிய லோகோவையும் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதன் நிறுவனர் தீபிந்திர் கோயல் அறிக்கை ஒன்றை நிறுவன பங்குதாரர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதில், “பிளிங்கிட்டை வாங்கியபோது ​​நிறுவனத்தையும் பிராண்டையும் வேறுபடுத்தும் விதமாக Eternal என நாங்கள் அழைக்க தொடங்கினோம். அதை ஒருநாள் அனைவரும் அறியும் விதமாக பொதுவெளியில் அறிவிக்கும் திட்டத்தையும் அப்போது கொண்டிருந்தோம். இன்று அந்த இடத்தை எட்டி உள்ளதாக கருதுகிறோம். அதனால் சொமேட்டோ லிமிடெட் என உள்ள நிறுவனத்தின் பெயரை ‘Eternal’ லிமிடெட் என மாற்ற விரும்புகிறோம். இதில் பிராண்ட் அல்லது செயலியில் நாங்கள் மாற்றத்தை மேற்கொள்ளவில்லை. இதற்கான ஒப்புதலை நிர்வாகக் குழு வழங்கி உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோ, குயிக் காமர்ஸ் பணியை கவனிக்கும் பிளிங்கிட், நிகழ்வுகள் சார்ந்து இயங்கும் டிஸ்ட்ரிக்ட்ஸ், சமையலறைப் பொருட்கள் விநியோகிக்கும் ஹைப்பர்ப்யூர் ஆகிய நான்கு பிராண்டுகளும் Eternal லிமிடெட் நிறுவனத்தின் அங்கமாக அறியப்படும். கடந்த 2022-ல் பிளிங்கிட் வாங்கப்பட்டது.

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் போனில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால், நேரடியாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வரும் பயனர்களாக இருப்பார்கள். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும். இந்த நுகர்வு கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இதில் சொமேட்டோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008-ல் இது நிறுவப்பட்டது. அப்போது Foodie-Bay என்ற பெயரில் இது அறியப்பட்டது. 2015-ல் உணவு டெலிவரி சேவையை இந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கியது.

SCROLL FOR NEXT