நபார்டு வங்கி கருத்தரங்கில், வளம் சார்ந்த மாநில அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். உடன், நபார்டு வங்கி மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் ஆர்.ஆனந்த், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பினோத் குமார், ஐஓபி மேலாண்மை இயக்குநர் அஜய் குமார் வத்ஸ்சவா, உணவு துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித் துறை செயலர் டி.உதயசந்திரன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
வணிகம்

முன்னுரிமை துறைகளுக்கு ரூ.9 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் உள்ளிட்ட முன்னுரிமை துறைகளுக்கு 2025-26-ம் ஆண்டில் ரூ.9.38 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக, நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சார்பில், 2025-26-ம் ஆண்டுக்கான மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:

நபார்டு வங்கி முன்னுரிமை துறைகளுக்கு 2025-26-ம் ஆண்டுக்கான கடன் தொகை ரூ.10 லட்சம் கோடி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், ரூ.43,458 ஆயிரம் கோடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு வழங்கப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26 சதவீதம் பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி 11 முதல் 12 சதவீதமாக உள்ளது.

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ.29,730 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. ஊரக வளர்ச்சிக்கு நபார்டு வங்கி ரூ.31,887 கோடி நிதி வழங்கி உள்ளது. நபார்டு பரிந்துரை செய்துள்ள திட்டங்களை தமிழக அரசு வரும் காலத்தில் செயல்படுத்தும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தலைமைச் செயலர் நா.முருகானந்தம் பேசும்போது, ‘‘மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கடன் பொருளாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். எனவே, இந்த இலக்கை அடைய அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கிராமப் பகுதிகளில் வசிக்கும் 45 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 93 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர். எனவே, வங்கிகளும், கூட்டுறவு நிறுவனங்களும் அவர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும்’’ என்றார்.

முன்னதாக, கருத்தரங்கில் பேசிய நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொதுமேலாளர் ஆர்.ஆனந்த் தனது உரையில், ‘‘2025-26-ம் ஆண்டு தமிழகத்தில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.9.38 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதம் விவசாயத் துறைக்கும், 35 சதவீதம் எம்எஸ்எம்இ துறைக்கும், எஞ்சியவை இதர துறைகளுக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் வரும் ஆண்டில் வேளாண் துறையில் 13 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

இக்கருத்தரங்கில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பினோத் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் அஜய் குமார் ஸ்ரீவத்ஸ்சவா, உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித் துறை செயலர் டி.உதயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT