சென்னை: ரயில் டிக்கெட் பதிவு முதல் ரயில் பயணம் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கும் ‘SwaRail’ என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இது பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்துக்காக இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்துவது ரயில் சேவையை தான். குறுகிய தூர பயணம் தொடங்கி நீண்ட தூர பயணம் வரை மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். டிஜிட்டல் உலகில் ரயில் பயணம் சார்ந்து பல்வேறு மொபைல் செயலிகளை பயன்படுத்துபவர்களும் உண்டு. இந்தச் சூழலில்தான் ‘SwaRail’ செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இதை சிஆர்ஐஎஸ் எனப்படும் சென்டர் ஃபார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் வடிவமைத்துள்ளது. ரயில் டிக்கெட் பதிவு செய்ய, பிஎன்ஆர் நிலையை அறிய, பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்ய என இந்த செயலி பயணிகளுக்கு எண்ணற்ற சேவைகளை வழங்குகிறது. இப்போது முன்பதிவு டிக்கெட், அன்ரிசர்வ்டு (Unreserved) டிக்கெட் என ஒவ்வொரு தேவைக்கும் பயணிகள் பல்வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு தீர்வு தரும் வகையில் ‘SwaRail’ செயலி அமைந்துள்ளது.
இந்த செயலியின் பீட்டா சோதனை நிறைவுக்கு பிறகு ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும். இந்த செயலியை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்யும் பயனர்கள் புதிதாக பதிவு செய்து Sign-In செய்யலாம். யுடிஎஸ் மொபைல், ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் மாதிரியான செயலிகளை ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பயனர்கள் அந்த லாக்-இன் விவரங்களை கொடுத்து பயன்படுத்தலாம்.
பயனர்களுக்கு எளிதான பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த செயலியின் ஹோம் பேஜில் இருந்து ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம், அன்ரிசர்வ்டு டிக்கெட் பெறலாம், பிளாட்பார்ம் டிக்கெட் பெறலாம், பார்சல் தொடர்பான விவரங்களை அறியலாம், ரயில் மற்றும் பிஎன்ஆர் நிலையை நிகழ் நேரத்தில் அறியலாம், ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்யலாம், புகார் தெரிவிக்கலாம். மொத்தத்தில் இந்த செயலி ரயில் பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை தடையின்றி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.