வணிகம்

தங்கம் விலை ரூ.62,480 ஆக உயர்வு: நகை வியாபாரிகள் கூறுவது என்ன?

செய்திப்பிரிவு

தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ரூ.62,480-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஒரு பவுன் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது. பின்னர் சற்று குறைந்து, மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200 ஆக இருந்தது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் எதிரொலியாக ரூ.62,320 ஆக உயர்ந்தது. 10 நாட்களில் பவுன் விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது. 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதே விலையே நீடித்தது.

கடந்த 3-ம் தேதி ஒரு கிராம் ரூ.7,705, ஒரு பவுன் ரூ.61,640-க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.105 என பவுனுக்கு ரூ.840 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,810-க்கும், ஒரு பவுன் ரூ.62,480-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.8,520, ஒரு பவுன் ரூ.68,160 என இருந்தது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருவதால், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு நகை வாங்க திட்டமிட்டுள்ளோர் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவு வரி விதித்துள்ளார். இதன்மூலம் பொருளாதார போர் தொடங்கி உள்ளார். மேலும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கப்படவில்லை. தவிர, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது’’ என்றனர்.

வெள்ளி விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.107 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.1 குறைந்து, ரூ.106-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,06,000 ஆக இருந்தது.

SCROLL FOR NEXT