பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களுக்கு சொந்த வீடே, மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. தற்போது ஒரு வீட்டுக்கான வாடகைக்கு ரூ.2.4 லட்சம் வரை டிடிஎஸ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரம்பு புதிய பட்ஜெட்டில் ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
தற்போதைய நடைமுறைகளின்படி 2வது வீட்டுக்கான வாடகைக்கு டிடிஎஸ் வரிச் சலுகை கிடையாது. புதிய பட்ஜெட்டில் இரண்டு வீடுகளுக்கான வாடகைக்கு டிடிஎஸ் வரி சலுகை கோரலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் கூறியதாவது: குறைந்த மற்றும் நடுத்தர வருமான வீட்டு வசதிக்கான சிறப்பு சாளர நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரியல் எஸ்டேட் துறையில் முடங்கி கிடக்கும் வீட்டு வசதி திட்டங்களை விரைந்து முடிக்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.
தற்போதைய பட்ஜெட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான வீட்டு வசதிக்கான சிறப்பு சாளர நிதி திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.15,000 கோடியை ஒதுக்கி உள்ளது. இதன்காரணமாக ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையும்.
இரு வீடுகளுக்கான வாடகைக்கு டிடிஎஸ் வரிச் சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் புதிதாக வீடுகளைவாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இது ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும். இவ்வாறு ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.