வணிகம்

தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் பட்ஜெட்: அசோசேம் பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டானது, நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வை அதிகரிக்கும் என்று அசோசேம் பாராட்டு தெரிவித்துள்ளது.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் (அசோசேம்) தலைவர் சஞ்சய் நாயர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தைரியமான ஒரு முடிவெடுத்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்புகளால் நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு அதிகரிக்கும். இதனால் வளர்ச்சிக்கு வழி ஏற்படும்.

அதே நேரத்தில், மத்திய மற்றும் நடுத்தர தொழில்துறை, ஸ்டார்ட்-அப் மற்றும் ஏற்றுமதிகளின் திறனை வெளிக்கொணர்வதில் தெளிவான கவனம் பட்ஜெட்டில் செலுத்தப்பட்டுள்ளது. நுகர்வுத்தன்மையை அதிகரிக்கும் தைரியமான பட்ஜெட் என்று நான் இதை சொல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசோசேம் முன்னாள் தலைவர் அஜய் சிங் கூறும்போது, “இந்த பட்ஜெட்டானது நடுத்தர வகுப்பு மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. வரும் காலத்தில் நாடு வளர்ச்சி பெறும் நோக்கில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

120 சிறிய நகரங்களுக்கு புதிய வான்வழித் திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் உடான் திட்டத்தால் அதிக பலன் ஏற்படும். இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி அளவுக்கு கூடுதலாக விமானத்தில் செய்யும் மக்கள் இருப்பர். உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை மேம்பாடு அடையும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT