புதுடெல்லி: முதல் முறையாக தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரையிலான கடன் வழங்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், “வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை எட்ட அனைத்துப் பிராந்தியங்களும் சமன்பாடான வளர்ச்சியை அடைய வேண்டியது அவசியமாகும். குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் 5 கோடியிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உதயம் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் 10 லட்சம் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் முதல் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதிகளில் நிதி உருவாக்கப்படும். முதல் முறையாக தொழில் தொடங்கும் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரையிலான கடன் வழங்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவின் காலணி, தோல் துறையின் உற்பத்தித் திறன், தரம், போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். ரூ. 4 லட்சம் கோடி வருவாய் ஈட்டும், ரூ. 1.1 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொம்மைகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்காக பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டில் தொழில்முனைவோரை உருவாக்கும் பொருட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக ஊக்கம் அளித்து வருகிறது. அந்த வகையில் 2025-26-ம் நிதியாண்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காக நிதித்திட்டங்களுக்கான புதிய நிதித்திட்டம் (எப்எப்எஸ்) என்ற நிதியத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிதியத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.