வணிகம்

தேசிய நெடுஞ்சாலைகளின் தரம், பாதுகாப்பை மேம்படுத்த அதிக முக்கியத்துவம்: நிதின் கட்கரி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகள் நமது தேசிய சொத்துகள் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, “தேசிய நெடுஞ்சாலைகள், நமது தேசிய சொத்துகள். எனவே, அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். கட்டுமானத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், நமது அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பை சரிசெய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நெடுஞ்சாலைகளை அமைப்பதில் தொழில்நுட்பம் ஒரு சிறந்த இயக்கு சக்தியாக இருக்கிறது. நுண்ணறிவுடன் தானாக இயங்கக்கூடிய இயந்திரங்களின் உதவியுடன் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டுமானங்களை அமைப்பது, ஒரு சிறந்த முயற்சியாகும். இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான லக்னோ-கான்பூர் விரைவுச் சாலை சோதனை திட்டத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். விரைவில் இந்த தொழில்நுட்பத்தை மற்ற திட்டங்களுக்கும் செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அஜய் தம்தா, “உலகத் தரம் வாய்ந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இது நமது உள்கட்டமைப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தில் ஒவ்வொரு பங்குதாரரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நாம் முன்னேறும்போது, மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு அவசியம். தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை 2047 தொலைநோக்குப் பார்வையுடன் சீரமைக்கவும், நமது தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

'தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடன் கட்டுமானம்' தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமான வலிமையை மேம்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட 'தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடன் கட்டுமானத்தை ஏற்றுக்கொள்வது' குறித்த வரைவுக் கொள்கையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT