இந்தியாவின் டிஜிட்டல் பேமண்டில் யுனிபைடு பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் எனப்படும் யுபிஐ-யின் பங்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய பணப்பட்டுவாடா (பேமண்ட்) முறை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் பணம் செலுத்தல் முறையில் கடந்த 2019-ம் ஆண்டில் யுபிஐ பங்கு 34 சதவீதமாக இருந்தது. இது 2024-ல் வியக்கத்தக்க வகையில் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ-யின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 74 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
பொதுமக்களிடையே யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ள அதேவேளையில், ஆர்டிஜிஎஸ், நெப்ட், ஐஎம்பிஎஸ், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் பேமண்ட்களின் பயன்பாடு 66 சதவீதத்திலிருந்து வெறும் 17 சதவீதமாக குறைந்துள்ளது.
பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் இந்தியாவில் டிஜிட்டல் பேமண்ட் வளர்ச்சியில் யுபிஐ-யின் பங்கு மிக கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.
கடந்த 2018-ல் யுபிஐ பரிமாற்றம் 375 கோடியாக இருந்த நிலையில், 2024-ல் அது 17,221 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, யுபிஐ பணப்பரிவர்த்தனையின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.5.86 லட்சம் கோடியிலிருந்து ரூ.246.83 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.