மனோஜ் சின்ஹா | கோப்புப் படம் 
வணிகம்

“ஜம்மு காஷ்மீரின் தொழில் துறை சூழலில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம்” - துணைநிலை ஆளுநர்

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொழில் துறைக்கான சூழல், கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசம் துடிப்பான ஸ்டார்ட் அப் மையமாக மாறி இருப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு ஐஐஎம்-ல் நடைபெற்ற 'பிரிக்ஸ் இளைஞர் கவுன்சில் தொழில்முனைவோர் ரன்-அப் நிகழ்வை' தொடங்கி வைத்துப் பேசிய மனோஜ் சின்ஹா, "கடந்த சில ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரின் தொழில்துறை சூழல் முன்னெப்போதும் இல்லாத எழுச்சியைக் கண்டுள்ளது. இது புதுமை, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவியல் முன்னேற்றங்களின் கலாச்சாரத்தை வளர்த்துள்ளது. நாட்டின் உயர்மட்ட தொழில்முனைவோர்களில் நமது இளைஞர்களும் அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.

அரசாங்கத்தின் நேர்மையான முயற்சிகளும் கொள்கை தலையீடுகளுமே ஜம்மு காஷ்மீரை ஒரு துடிப்பான ஸ்டார்ட்அப் மையமாக மாற்றியுள்ளன. தொழில்துறை மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள், புதுமை மற்றும் தொழில்முனைவோர் சூழல் அமைப்பை மறுவரையறை செய்து, இளைஞர்களை மேம்படுத்துகின்றன.

ஸ்டார்ட்அப் மையங்களை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நிறுவுவதற்கு சிறந்த வளங்களையும் ஆதரவையும் வழங்குகிறோம். எங்கள் இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், தங்களை அர்ப்பணிக்கவும், ஒரு துடிப்பான ஜம்மு காஷ்மீரை உருவாக்கவும், அதன் வளர்ச்சிப் பாதையை புதிய உயரங்களுக்கு உயர்த்தவும் நான் விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM), இந்திய அரசாங்கத்தின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் துறை மற்றும் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் (GCTC) ஆகியவற்றுடன் இணைந்து, BRICS இளைஞர் கவுன்சில் தொழில்முனைவோர் ஆலோசனை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்வு இளைஞர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. ஜம்மு காஷ்மீர் முழுவதிலுமிருந்து 40க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சுற்றுலா, உணவு தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், மென்பொருள் தொழில்நுட்பம், மூலிகை அழகுசாதனப் பொருட்கள், மூலிகை உணவு சப்ளிமெண்ட்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் புதுமைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.

கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT