இந்தியாவின் முதல் ஆப்டிக்ஸ் பூங்காவை மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.12,000 கோடி முதலீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக பராஸ் டிபன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் முதல் ஆப்டிக்ஸ் பூங்காவை மகாராஷ்டிர மாநிலத்தில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.12,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார அமைப்பு மாநாட்டின்போது மகாராஷ்டிர மாநில அரசுடன் இந்த திட்டத்துக்கான முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஆப்டிக் பூங்கா திட்டம் 2028-ம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் தன்மையைப் பொறுத்து இந்த திட்டம் 2035-ம் ஆண்டு வரை தொடர வாய்ப்புள்ளது .
பாதுகாப்பு, விண்வெளி, ஆட்டோமோட்டிவ், செமிகண்டக்டர் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான தொழில்நுட்ப மையமாக உருவெடுப்பதை இந்த முதலீடு உறுதி செய்யும். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக நேரடியாக 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.