வணிகம்

சவரன் ரூ.60,000-ஐ நெருங்கியது: தொடர்ந்து உயருமா தங்கம் விலை?

இல.ராஜகோபால்

கோவை: கடந்த சில மாதங்களாக பெரியளவில் மாற்றம் காணப்படாத நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கரோனா தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையிலான போர், உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. அப்போது, சவரனுக்கு ரூ.4 ஆயிரம் வரை விலை குறைந்தபோதும், சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது: இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்த காரணத்தால் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. இருப்பினும் உலக சந்தை நிலவரம் காரணமாக கடந்த சில மாதங்களாக பெரியளவில் மாற்றம் காணப்படாத நிலையில் மீண்டும் தற்போது தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. அமெரிக்க அரசியல் நிலவரமே இதற்கு காரணமாகும்.

புதிய அதிபராக டிரம்ப் இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது முதல்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளுக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் பல சலுகைகளை வழங்கினார். அவை தொடருமா அல்லது வணிகம் தொடர்பான நடவடிக்கைகளில் அதிரடி மாற்றங்கள் கொண்ட அறிவிப்புகள் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும். அமெரிக்க அரசியல் சூழல் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது.

இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.7,450-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,600-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.65,016-க்கு விற்பனையாகிறது. எதிர்வரும் நாட்களில் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பொங்கலுக்கு பின் திருமண நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் என்பதால் தங்கத்தின் விற்பனை ஓரளவு சிறப்பாக இருக்கும். நடப்பாண்டும் தங்கம் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT