புதுடெல்லி: இந்திய ஸ்டார்ட்அப்கள் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப்களுக்கான மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றிய நாட்டின் இளைஞர் சக்தியின் வலிமை மற்றும் திறன்களை எண்ணி பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் இயக்கம் தொடங்கப்பட்டதன் 9ம் ஆண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "ஸ்டார்ட்அப் இயக்கம் தொடங்கப்பட்டதன் 9ம் ஆண்டு என்ற ஒரு மைல்கல் முயற்சியை இன்று நாம் கொண்டாடுகிறோம். இது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு திட்டமாகும். ஏனெனில், இது இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாக உருவெடுத்துள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றியுள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் முதல் கிராமப்புற கண்டுபிடிப்புகள் வரை, சுகாதார முன்னேற்றங்கள் முதல் உயிரி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரை, Fintech முதல் EdTech வரை, சுத்தமான எரிசக்தி முதல் நிலையான தொழில்நுட்பம் வரை, இந்திய ஸ்டார்ட்அப்கள் உலகளாவிய சவால்களைத் தீர்க்கின்றன. அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன; தன்னம்பிக்கைக்கான நமது தேடலை அதிகரிக்கின்றன.
ஸ்டார்ட்அப் இந்தியா, இந்தியாவை மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டார்ட்அப்கள் செழிப்பதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளதா என பலர் சந்தேகங்களை எழுப்பினர். அப்படிப்பட்ட ஒரு நிலையில், இது நடந்துள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை ஊக்குவிக்க நாங்கள் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிடவில்லை. எங்கள் கொள்கைகள், வணிகத்தை எளிதாக்குவது, வளங்களை அதிக அளவில் அணுகுவதற்கான சூழலை உருவாக்குவது என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளன. நமது இளைஞர்கள் சவால்களை எதிர்நோக்குபவர்களாக மாறுவதற்காக நாங்கள் புதுமை மற்றும் இன்குபேட்டர் மையங்களை தீவிரமாக ஊக்குவித்து வருகிறோம். தனிப்பட்ட முறையில் வரவிருக்கும் ஸ்டார்ட்அப்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
ஸ்டார்ட்அப் இந்தியாவின் இந்த வெற்றி, இன்றைய இந்தியா துடிப்பானது, நம்பிக்கையானது மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. இந்தப் பயணத்தை நாம் குறிக்கும் வேளையில், ஒவ்வொரு கனவையும் உயர்த்தும் மற்றும் ஆத்மநிர்பர் பாரதத்திற்கு பங்களிக்கும் ஒரு தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஸ்டார்ட்அப் உலகில் உள்ள ஒவ்வொரு இளைஞரையும் நான் பாராட்டுகிறேன். மேலும், இதைத் தொடர இளைஞர்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள் என்பது எனது உறுதி! இந்தியாவை ஸ்டார்ட்அப்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக மாற்றிய நாட்டின் இளைஞர் சக்தியின் வலிமை மற்றும் திறன்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.