கோவை: நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.8,900 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இறக்குமதியை குறைக்க, சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்திய ஜவுளிப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ‘ஐடிஎப்’ தொழில் அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) மட்டும் 1.07 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8,900 கோடி) மதிப்பிலான ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், சீனா, ஸ்பெயின், வியட்நாம் நாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர கணக்கின்படி நடப்பு நிதியாண்டில் ரூ.13,000 கோடி மதிப்பில் ஆயத்த ஆடை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகளவு இறக்குமதி செய்யப்படுவது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கிறது. விலை, தரம், புதிய டிசைன், புது ரகங்கள் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்கள் இறக்குமதி அதிகரித்து வருவதற்கான காரணங்களை கண்டறிந்து சில்லறை விற்பனை நிறுவனத்தினர் மற்றும் ஜவுளி உற்பத்தி கிளஸ்டர்கள் இணைந்து தற்போது உள்ள நிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும். இதனால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன் பெறும். எனவே, சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்திய ஜவுளிப் பொருட்கள் விற்பனையை ஊக்குவித்து இறக்குமதியை குறைக்க உதவ வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.