சென்னை: சென்னையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்திய சரஸ் மேளா கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.1 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சரஸ் மேளா விற்பனை கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த டிச.27-ம் தேதி தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், பிஹார், மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் 120 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதன்படி, கண்காட்சியில் குஜராத் மாநில கைத்தறி ஆடைகள், மகாராஷ்ட்ரா மாநில பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள், மேற்கு வங்காள கைவினைப் பொருட்கள், புதுச்சேரி மூலிகை பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள், தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், கரூர் கைத்தறி, சிவகங்கை பாரம்பரிய அரிசிகள், தூத்துக்குடி பனைவெல்லம், விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன.
அந்தவகையில் கடந்த டிச.27 முதல் ஜன.9-ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சரஸ் மேளா விற்பனை கண்காட்சியில் மொத்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.