வணிகம்

இந்தியாவில் வரி விதிப்பு அதிகம்: தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க அசோசேம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தனிநபர் வருமான வரி விதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, வரும் பட்ஜெட்டில் அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அசோசேம் அமைப்பு பட்ஜெட்டுக்கு முந்தைய அதன் குறிப்புகளில் தெரிவித்துள்ளதாவது: கார்ப்பரேட் வரி விகிதங்களைப் குறைத்ததன் விளைவாக, தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரி விகிதங்களுக்கு இடையிலான வித்தியாசம் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் வரி விகிதம் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ள நிலையில், தனிநபர் வரி விகிதங்களில் இதேபோன்ற குறைப்பு செய்யப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரியைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக ஹாங்காங்கில் 15 சதவீதம், இலங்கை 18 சதவீதம், வங்கதேசம் 25 சதவீதம், சிங்கப்பூர் 22 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால், இது இந்தியாவைப் பொருத்தவரையில் 42.744 சதவீதம் (உச்சபட்ச வரி அடுக்கு) என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது. புதிய வரி விகித முறையில் இது 39 சதவீதமாக உள்ளது. அதேசமயம், சாதாரண கார்ப்பரேட் வரி விகிதம் 25.17 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது தனிநபர் வருமான வரி என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இவற்றுக்கு இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது . மேலும், தனிநபர் வருமான வரி விதிப்பு முறையில் இரண்டு முறை பின்பற்றப்படுவது மிகவும் சிக்கலானதாக உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும்.

தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரி விகிதங்களுக்கு இடையேயான பெரிய இடைவெளி, கார்ப்பரேட் மாதிரிக்கு ஆதரவாக பல கட்டமைப்பு முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது. உதாரணமாக, உரிமையாளர் வணிகம் நிறுவன வடிவத்திற்கு மாறுகிறது. இவ்வாறு அசோசேம் தெரிவித்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

SCROLL FOR NEXT