வணிகம்

செபி-க்கு கூடுதல் அதிகாரம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

செய்திப்பிரிவு

பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மோசடி நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள், செபி விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இந்த மசோதாவில் விதிகள் உள்ளன. மோசடி தொடர்பான விசாரணை அறிக்கைகளைப் பெறுவது, செபி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்த மசோதா அமலுக்கு வந்தால், அனைத்து வகையான தகவல்களைப் பெறுவதற்கு செபிக்கு அதிகாரம் கிடைக்கும். முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது செபிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. மூன்று முறை குடியரசுத் தலைவரால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டபோதிலும் அதை சட்டமாக அந்த அரசால் கொண்டு வர முடியவில்லை.

மத்தியில் தற்போது பொறுப்பேற்றுள்ள மோடி தலை மையிலான அரசு இந்த மசோ தாவை இப்போது மக்களவையில் அறிமுகம் செய்துள்ளது. மசோதாவை மத்திய நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சுகவீனமடைந்ததால் திங்கள்கிழமை அவர் அவைக்கு வரவில்லை. அவருக்குப் பதிலாக இணையமைச்சர் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் நலன் காக்கவும், மோசடி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் புதிய மசோதாவில் விதிமுறைகள் வகுக்கப்பட்டதாக மசோதாவை அறிமுகம் செய்த நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த மசோதா அமலுக்கு வந்தால், நிறுவனங்கள் பற்றிய தகவலை மட்டுமல்ல, பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள தனிநபர் பற்றிய தகவலையும் பெறுவதற்கான அதிகாரம் செபி-க்கு கிடைக்கும்.

இது தவிர, மோசடி நிதி நிறுவனங்களின் செயல்பாடு களைக் கட்டுப்படுத்தவும், அத்தகைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்த மசோதா அதிகாரம் அளிக்கும். மேலும் செபி தொடர்ந்த வழக்குகளில் விரைவாக தீர்ப்பு கிடைக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி ரூ.100 கோடிக்கும் அதிகமான எந்த முதலீட்டுத் திட்டமும் ஒட்டுமொத்த முதலீட்டுத் திட்டமாகக் கருதப்படும். இதன்படி மாவட்ட முதன்மை நீதிபதியின் அனுமதியோடு இத்தகைய நிறுவனங்களின் கணக்குப் புத்தகங்கள், பதிவு பத்திரம் உள்ளிட்ட பிற ஆவணங்களைக் கைப்பற்ற செபி-க்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT