தூத்துக்குடி: காற்றாலை இறகுகளை கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 1,869 காற்றாலை இறகுகளை கையாண்டு சாதனை படைத்திருக்கிறது.
இதுதொடர்பாக வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் பெங்களூரு, திருச்சி மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் தயாரிக்கப்பட்டு அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பின்லாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிகரித்துவரும் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக துறைமுகத்துக்குள் சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்பை வழங்கியுள்ளது.
வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாளுவதற்கு உள்கட்டமைப்பு வசதி, வேகமாக மற்றும் பாதுகாப்பான முறையில் கையாளுவதற்கு வசதியாக பளுதூக்கி எந்திரங்களின் சிறப்பான செயல்பாடுகள், துறைமுகத்தை விரைவாக வந்தடைவதற்கு வசதியாக நெரிசல் இல்லாத சாலைப் போக்குவரத்து, சிறந்த முறையில் காற்றாலை இறகுகளை கையாளும் மனிதவளம், எளிமையான முறையில் பாதுகாப்பாக காற்றாலை இறகுகளை கையாளுவதில் தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சங்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெற்றுள்ளது.
இதனால் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகுகளை கையாளுவதில் சாதனை புரிந்து வருகிறது. வ.உ.சி. துறைமுக ஆணையம் இந்த நிதியாண்டு 2024-2025 டிசம்பர் மாதம் வரை 1,869 காற்றாலை இறகுகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே மாதம் வரை கையாண்ட அளவான 1,332 காற்றாலை இறகுகளை விட அதிகமாக கையாண்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டில் 40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் வ.உ.சி. துறைமுகம் டிசம்பர் 2024 மாதம் மட்டும் 294 காற்றாலை இறகுகளை கையாண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 2023 மாதத்தில் கையாண்ட 88 காற்றாலை இறகுகளை விட அதிகமாக கையாண்டு 234 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மேலும் இந்த நிதியாண்டு 2024-2025-ல் டிசம்பர் மாதம் வரை 75 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாக கப்பல்களை கையாண்டு கடந்த நிதியாண்டு டிசம்பர் மாதம் வரை கையாண்ட 49 கப்பல்களை விட அதிகமாக கையாண்டு 50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த சாதனை புரிய பெரிதும் உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகவர்கள், போக்குவரத்து உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். இந்த சாதனைக்கு முக்கிய காரணியாக காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாளுவதற்கு ஏதுவாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சிறப்பான முறையில் பெற்றுள்ளது.
ஏற்றுமதியாளர்களின் விருப்பமான துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழ்வதோடு ஒரு பசுமையான வருங்காலத்தை நோக்கி பயணிப்பதற்கு அதன் நிலையான தன்மையை ஊக்குவிப்பதற்கும் இந்த சாதனை பெரிதும் உறுதுணையாக அமையும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.