டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை வர்த்தகத்தில் கடுமையாக சரிந்தது. இதற்கு முன்பு மார்ச் மாதம் 14-ம் தேதி ஒரு டாலர் 60.84 ரூபாய்க்கு சரிந்தது. அதன் பிறகு புதன்கிழமை ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது. புதன் கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலர் 61.49 ரூபாயாக முடிந்தது.
பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீடு வெளியேறுவதே ரூபாயின் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்க பெடரல் வங்கி, ஊக்க நடவடிக்கைகளை எந்த அளவில் குறைக்கப்போகிறது, வட்டி விகிதங்கள் குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்தே ரூபாயின் மதிப்பு தெளிவாக தெரியவரும் என்று கோட்டக் செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் கரன்சி வல்லுநர் அனிந்தயா பானர்ஜீ தெரிவித்தார்.