வணிகம்

பங்கு சந்தை வர்த்தகத்தில் முறைகேடு: 9 நிறுவனங்களுக்கு செபி தடை; ரூ.21.16 கோடி பறிமுதல்

செய்திப்பிரிவு

பங்கு சந்தை வர்த்தகத்தில் சட்டவிரோத நடைமுறைகளை பின்பற்றி ஆதாயம் அடைந்த 9 நிறுவனங்களுக்கு, செபி தடை விதித்து, சட்டவிரோதமாக ஈட்டிய ரூ.21.16 கோடியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் டீலர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் சில சட்டவிரோத நடைமுறைகளை பின்பற்றி உடனடிய ஆதாயம் அடைகின்றன. பிஎன்பி மெட்லைப் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் டீலர்களாக செயல்படும் சச்சின் பகல் தக்லி உட்பட 8 இதர நிறுவனங்கள் ‘ப்ரன்ட் ரன்னிங்’ என்ற சட்டவிரோத நடைமுறைகளை பின்பற்றியுள்ளன. இவர்கள் நிலுவையில் உள்ள ஆர்டர்கள், நடைபெறவுள்ள பரிவர்த்தனை நிலவரத்தை முன்கூட்டியே அறிந்து அந்த தகவல்களை தங்களின் கூட்டாளி நிறுவனங்களுக்கு பகிர்வர். இந்த தகவல்கள் பொதுவில் அறிவிக்கப்படாதவை.

இந்த தகவல்களை பயன்படுத்தி அந்த நிறுவனங்கள் பங்குகளை வாங்கியோ, விற்று உடனடி ஆதாயம் பெறுவர். இது போன்ற முறைகேட்டில் ஈடுபடுபவர்களை, பங்கு சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிஎன்பி மெட்லைப் பங்கு விற்பனையின் டீலராக செயல்பட்ட சச்சின் பகுல் தக்லி உட்பட 8 நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இது போன்ற சட்டவிரோத பங்கு விற்பனையில் ஈடுபட்டு ரூ.21.16 கோடி ஆதாயம் அடைந்ததை ஆய்வு மூலம் கண்டறிந்த செபி அந்த 8 நிறுவனங்களும் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஈட்டிய ரூ.21.16 கோடியும் பறிமுதல் செய்ய செபி உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைகேடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிஎன்பி மெட்லைப் நிறுவனம், செபி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட டீலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT