கோப்புப் படம் 
வணிகம்

திருப்பூர் பனியன் நிறுவனங்களும், மீறப்படும் தொழிலாளர் நலச் சட்டங்களும்!

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான தொழிற்சாலைகளில் சட்டப்படியான வேலை நேரம், வார விடுமுறை உட்பட தொழிற்சாலை சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை எனவும், இஎஸ்ஐ, பிஎஃப் ஆகிய தொழிலாளர் நலச்சட்டங்களும் மீறப்படுவதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன.

இதுதொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, “தொழிற்சாலைகளில் ஓவர் டைம் வேலை என்பது 3 மாதங்களில் 75 மணிநேரம் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதற்கும் இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும். பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரிவோர் உட்பட அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் இஎஸ்ஐ, பிஎஃப் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் உழைக்கும் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, நிறுவனங்கள்தோறும் முறையாக விசாகா கமிட்டியை அமல்படுத்துவதுடன், இதன் தலைவராக பெண் அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஓர் உறுப்பினர், வெளியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். இந்த கமிட்டி, ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசுக்கு வழங்க வேண்டும்.

10 பேருக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் விசாகா கமிட்டி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கமிட்டி உறுப்பினர் விவரம், புகார் பெட்டி, தொடர்பு எண் உள்ளிட்டவை தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெளிப்படையாக உள்ளதா என்பதை, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி மக்கள் அன்றாடம் கூடும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி விவரம், தொடர்பு எண் கொண்ட விளம்பரங்களை வைக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து, சமூக நலத் துறை பெண் தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT