வணிகம்

விவசாயிகளிடம் அமோக வரவேற்பு

செய்திப்பிரிவு

நிலமும் வளமும் பகுதியில் வெளியாகி வரும் கட்டுரைகள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு தொடர்பான கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையைப் படித்த விவசாயிகளில் 1000-க்கும் மேற்பட்டோர் தன்னை தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்ததாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வெண்பன்றி பண்ணை வைத்திருக்கும் வி.ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.

மேலும், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனது பண்ணைக்கு நேரில் வந்து பார்த்து, விவரங்களை கேட்டுச் சென்றதாகவும், ‘தி இந்து’ நாளிதழ் தந்த விவரங்களின் பயனால் பலர் வெண்பன்றி பண்ணை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி விட்டதாகவும் ராஜேந்திரன் கூறுகிறார்.

அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு தன்னிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு பேசியதாக சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின்பேராசிரியர் மற்றும் தலைவர் பா.டென்சிங் ஞானராஜ் கூறுகிறார்.

இதேபோல் அதே நாளில், வேர் உட்பூசணம் குறித்த கட்டுரை வெளியானது. இக்கட்டுரையினை படித்துவிட்டு 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொலைபேசியின் வாயிலாக தன்னை தொடர்பு கொண்டு வேர் உட்பூசணம் குறித்த தங்களது சந்தேகங்களை கேட்டறிந்ததுடன் ,அவற்றை பயிர்களில் பயன்படுத்தும் விதம் மற்றும் கிடைக்கும் இடங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டதாக மைராடா வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறைதொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணக்குமார் தெரிவிக்கிறார்.

SCROLL FOR NEXT