வணிகம்

அதிக செல்வத்தை உருவாக்கும் பங்குகள்: முதலிடத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்

செய்திப்பிரிவு

அதிக செல்வத்தை உருவாக்கும் பங்குகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது என மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2019-24 வரையிலான மதிப்பீட்டு காலத்தில் அதிக செல்வத்தை உருவாக்கிய பங்குகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், ரூ.11,17,800 கோடி செல்வத்தை உருவாக்கி முதலிடம் வகிக்கிறது. இந்நிறுவனத்தை தொடர்ந்து மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான டிசிஎஸ் ரூ.8,31,200 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், ரூ.5,44,900 கோடியுடன் பார்தி ஏர்டெல் முன்றாவது இடத்திலும் உள்ளன.

தனியார் துறையைச் சேர்ந்த ஐசிசிஐ வங்கி (ரூ.5,10,900 கோடி), பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ (ரூ.4,17,600 கோடி) ஆகியவை முறையே இந்த பட்டியலில் 4 மற்றும் 5-வது இடங்களில் உள்ளன. இன்போசிஸ் ரூ.3,89,300 கோடியுடன் 6-வது இடத்திலும், எல் அண்ட் டி ரூ.3,53,000 கோடியுடன் 7-வது இடத்திலும் உள்ளன.

2019-24 காலட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி உள்ளது. அதானி எண்டர்பிரைசஸ மற்றும் அதானி பவர் அதிக சொத்துகளை உருவாக்குவதில் மிக முக்கிய நிறுவனங்களாக திகழ்கின்றன. அதன்படி, ரூ.3.40,800 கோடியுடன் அதானி எண்டர்பிரைசஸ் இந்த பட்டியலில் 8-வது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் ரூ.3,15,400 கோடியுடன் 9-வது இடத்திலும், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ரூ.3,15,000 கோடியுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

கணக்கீட்டு காலகட்டத்தில் மொத்த சொத்து உருவாக்கத்தில் மேற்கண்ட 10 நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம் அளவுக்கு உள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT