சென்னை: பணி காரணமாக ‘ஸ்ட்ரெஸ்’ இருப்பதாக சர்வேயில் சொன்ன சுமார் நூறு ஊழியர்களை ‘எஸ் மேடம்’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது. இது சர்ச்சையான நிலையில் ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்கவில்லை என அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் ‘யாரையும் YesMadam பணி நீக்கம் செய்யவில்லை’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேலையில் நிலவும் மன அழுத்தத்தை சுட்டும் வகையில் வெளியான சமூக வலைதள பதிவுக்கு கமெண்ட் மூலம் கோபத்தையும், வலுவான கருத்துகளையும் முன்வைத்த அனைவருக்கும் நன்றி.
ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மனிதாபிமானமற்ற செயலை ஒருபோதும் நாங்கள் செய்ய மாட்டோம். அந்த ஊழியர்களுக்கு பணியில் பிரேக் கொடுத்துள்ளோம். அவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு பணியில் இணைவார்கள் என ‘எஸ் மேடம்’ தெரிவித்துள்ளது.
சர்ச்சை என்ன? - சலூன் ஹோம் சர்வீசஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘எஸ் மேடம்’, சமீபத்தில் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக ஒரு சர்வே நடத்தியுள்ளது. அதில், மன அழுத்தம் இருப்பதாக கூறிய நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ஹெச்ஆர் துறை தரப்பில் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
‘வேலையில் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை புரிந்துகொள்ள நாங்கள் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினோம். அதில், பலர் உங்களுடைய கவலைகளை பகிர்ந்துள்ளீர்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதில் உறுதியுடன் உள்ள இந்நிறுவனம், உங்களின் கருத்துகளை கவனமாக பரிசீலித்தது. பணியிடத்தில் யாரும் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மன அழுத்தம் இருப்பதாக தெரிவித்த ஊழியர்களை விடுவிப்பதற்கான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என அதில் தெரிவித்திருந்தாக சொல்லப்பட்டது. இது இணையத்தில் விவாதமானது.