குன்னூர்: கூட்டுறவு வார விழா ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப் படுகிறது. கூட்டுறவு இல்லாவிட்டால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மனிதன் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் நில மற்றும் வேளாண் வங்கிகள் அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை அறிய, 1882-ம் ஆண்டு மதராஸ் மாகாண அரசால் சர் பெரடரிக் நிக்கல்சன் பணியமர்த்தப் பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில், இந்தியா தனது சொந்த வளங்களை பயன்படுத்தி, கூட்டுறவு இயக்கம் மூலமாக வளம் பெற முடியும் என தெரிவித்தார். இதுவே, இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் தொடக்கம் என கருதப்படுகிறது.
அதன்பேரில், 1904-ம் ஆண்டு கடன் சங்க சட்டம் இயற்றப்பட்டது. 1917-18ம் ஆண்டு 25 ஆயிரத்து 192 கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு, 10.9 லட்சம் பேர் உறுப்பினர்களாகினர். பின்னர், நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.
கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரமாகவும், உறுப்பினர்களின் எண்ணிக்கை 91.6 லட்சமாகவும் உயர்ந்தது. பின்னர், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் கூட்டுறவு மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள் என பல்வேறு துறைக்கும் பரவின. இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தொடங்க காரணமான, சர் பெரடரிக் அகஸ்டஸ் நிக்கல்சன் கூட்டுறவு இயக்கத்தின் தந்தையாக கருதப்படுகிறார்.
1846-ம் ஆண்டு பிறந்த சர் பெரடரிக் நிக்கல்சன், 1936-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி இறந்தார். 1904-ம் ஆண்டு அவர் பணி ஓய்வுபெற்ற பின்னர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 ஆண்டுகள் வாழ்ந்தார். குன்னூரில் உள்ள டைகர் ஹில் கல்லறை தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மனைவி கேத்ரீனின் கல்லறையும் அங்குள்ளது. அவரது நினைவாக, குன்னூர் - உதகை சாலையிலுள்ள கூட்டுறவு பண்டக சாலை, நிக்கல்சன் கூட்டுறவு பண்டக சாலை என அழைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் கூறும்போது, “அரசுகள் கூட்டுறவு கடன் சங்கங்களை நடத்திய வரலாறு இல்லாத காலகட்டத்தில், நிக்கல்சனின் கூட்டுறவு இயக்க பரிந்துரைகளால் இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி அடைந்து மக்கள் பயன்பெற வழி வகுத்தது. அவர் ஓய்வு பெற்ற பின்னர் 30 ஆண்டுகள் குன்னூரில் வசித்தார். அவரின் கொள்கை, கோட்பாடுகளை கூட்டுறவு ஊழியர்கள் மற்றும் நீலகிரி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
குன்னூரை அடுத்த டைகர்ஹில் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் நிக்கல்சன், அவரது மனைவி கேத்ரீனின் கல்லறைகள் உள்ளன. நிக்கல்சனுக்கு குன்னூரில் நினைவகம் அமைக்க வேண்டும்" என்றார். இந்தியாவில் கூட்டுறவு ரேஷன் கடைகள் உருவான பின்னணியில் நீலகிரிக்கு இடம் உள்ளது. கூட்டுறவின் தந்தை என அழைக்கப்படும் சர் பெரடரிக் அகஸ்டஸ் நிக்கல்சன் நீலகிரி மாவட்டத்தில் இதை தொடங்கி னார்.சர் பெரடரிக் அகஸ்டஸ் நிக்கல்சன்