மும்பை: இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 78,675 ஆகவும், நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 23,883 ஆகவும் குறைந்தன. சதவீத அளவில் சென்செக்ஸ் 1.03%, நிஃப்டி 1.07% சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
பிரிட்டானியா 7.49%, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 3.20%, என்டிபிசி 3.12%, ஹெச்டிஎஃப்சி வங்கி 2.72%, ஏசியன் பெயிண்ட்ஸ் 2.68%, எஸ்பிஐ 2.47%, டாடா மோட்டார்ஸ் 2.47%, பஜாஜ் ஆட்டோ 2.43%, ஸ்ரீராம் பைனான்ஸ் 2.28%, மாருதி சுசூகி 2.25%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.22% என்ற அளவில் சரிவைக் கண்டன.
மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மதிப்பு ரூ.5.76 லட்சம் கோடி சரிந்து ரூ.436.78 லட்சம் கோடியாக குறைந்தது. அந்நிய பங்கு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் உள்ள தங்கள் பங்குகளை அதிக அளவில் விற்றுவருகின்றனர். இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், “சமீபமாக அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் உள்ள தங்கள் பங்குகள் விற்று வெளியேறி சீனா, ஐப்பான், தைவான் நாடுகளின் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் இந்திய வர்த்தகம் குறித்து முதலீட்டாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. உணவு பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.