உதகை: குளிர்ந்த காலநிலையைக் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் கேரட், உருளைக்கிழங்கு, டர்னிப், முட்டைகோஸ் ஆகிய ஆங்கில காய்கறிகளும், ஐஸ்பெர்க், லெட்யூஸ், செல்லரி போன்ற சீன காய்கறிகளும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த வகை காய்கறிகளை, தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விவசாயிகள் அனுப்பிவருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு, சந்தைகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
உதகை சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தமான் தீவுகளில் உதகை முட்டைகோஸ் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதால், ஆர்வத்துடன் அனுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக உதகையை சேர்ந்த விவசாயி மணிகண்டன் கூறும்போது, “கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான விவசாயிகள் முட்டைகோஸ் பயிரிட்டிருந்தனர். நன்கு விளைந்த முட்டைகோஸ் கிலோ ரூ.3 வரை மட்டுமே விலை போனது. நஷ்டமடைந்த விவசாயிகள் பலரும் மீண்டும் முட்டைகோஸ் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே முட்டைகோஸ் பயிரிட்டதால், தேவை அதிகமாக உள்ளது. கிலோ ரூ.10-க்கு மேல் கட்டுப்படியான விலை கிடைப்பதால் அறுவடை செய்து வருகிறோம்” என்றார்.
கேத்தி பாலாடா பகுதியைச் சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரி சுப்பிரமணி கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ் பயிர்களை, அந்தமான் தீவுகளில் அதிகம் கொள்முதல் செய்வார்கள். தற்போது முட்டைகோஸ் அறுவடை நடப்பதால், லாரிகள் மூலமாக சென்னைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கப்பல்கள் மூலமாக அந்தமானுக்கு அனுப்பி வருகின்றனர்” என்றார்.