வணிகம்

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காகும்: சர்வதேச நிபுணர்கள் கணிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ போனுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 23 கோடி ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

கடந்த காலங்களில் சுமார் 85 சதவீத ஐபோன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 14 சதவீத ஐபோன் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சர்வதேச வணிக நிபுணர்கள் கூறியதாவது: கடந்த 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அப்போது சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டது. இதன்காரணமாக சீனாவில் உற்பத்தி செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் குறைத்தன. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஐபோன்களை உற்பத்தி செய்வதை குறைத்தது.

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இதன்படி அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி கணிசமாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

எனவே ஆப்பிள் நிறுவனம் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் ஐபோன்களை பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன்படி இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும். தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது ரூ.2.53 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

இந்தியாவில் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 26 சதவீதமாக உயரும்.

எனினும் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை கவர இந்திய அரசு பல்வேறு வரிசீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அமெரிக்க நிறுவனங்களை தக்க வைத்து கொள்ள முடியும். இல்லையெனில் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மாறக்கூடும்.

இந்தியாவில் பாக்ஸ்கான், பெகாட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை தயாரித்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் ஆலைகளில் ஐபோன்களின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் 70 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வாறு சர்வதேச வணிக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT