மும்பை: கடந்த அக்டோபரில் முறையான முதலீட்டு திட்டத்தின் (எஸ்ஐபி) மூலமாக பரஸ்பர நிதியங்களில் முதலீட்டாளர்கள் சாதனை அளவாக ரூ.25,000 கோடியை முதலீடு செய்துள்ளனர். அந்த மாதத்தில் பங்குகளின் விலை குறைவாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொகுப்பை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்மைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: எஸ்ஐபி-யில் கடந்த அக்டோபரில் சாதனை அளவாக ரூ.25,322 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, செப்டம்பரில் ரூ.24,509 கோடியாக இருந்தது.
அதேபோன்று கடந்த செப்டம்பர் மாதத்தில் 9.87 கோடியாக இருந்த எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை அக்டோபரில் முதன்முறையாக 10.12 கோடியை எட்டியது. நிகர அளவில் அக்டோபரில் 24.19 லட்சம் கணக்குகள் கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளன. இது, இந்திய சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
கடந்த அக்டோபரில் சந்தையின் செயல்பாடு மந்தமான நிலையில் இருந்தபோதிலும் எஸ்ஐபி முதலீடு அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் சென்செக்ஸ் 5.77 சதவீதமும், நிஃப்டி 6.22 சதவீதமும் சரிவை சந்தித்தன.
எஸ்ஐபி திட்டங்களில் பராமரிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு முதன்முறையாக கடந்த செப்டம்பரில் ரூ.13.81 லட்சம் கோடியை தொட்டது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் ரூ.13.39 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும், சந்தை சரிவின் காரணமாக அக்டோபரில் இந்த மதிப்பு ரூ.13.30 லட்சம் கோடியாக குறைந்தது. இவ்வாறு பரஸ்பர நிதிய கூட்டமைப்பு கூறியுள்ளது.