இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியோரில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் (79) முதலிடத்தை பிடித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த ஹு ரன் என்ற நிறுவனம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் சமூக நலத் தொண்டுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தொழிலதிபர்கள் வழங்கும் நன்கொடை குறித்து ஹு ரன் நிறுவனம் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதன்படி 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த 203 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஹூ ரன் நிறுவன பட்டியலின்படி இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியோரில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த ஓராண்டில் கல்விக்காக ரூ.2,153 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். நாள்தோறும் அவர் ரூ.5.9 கோடியை நன்கொடையாக வழங்கி வருகிறார்.
ஹு ரன் நிறுவனத்தின் பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 2-வது இடத்தில் உள்ளார். அவர் ஓராண்டில் கல்விக்காக ரூ.407 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
பஜாஜ் நிறுவன குடும்பத்தினர் ரூ.352 கோடி, குமார் மங்கலம் பிர்லா ரூ.334 கோடி, கவுதம் அதானி ரூ.330 கோடி, நந்தன் நிலகேணி ரூ.307 கோடி, கிருஷ்ண சிவுக்குலா ரூ.228 கோடி, அனில் அகர்வால் ரூ.181 கோடி, சுஷ்மிதா, சுப்ரதா பக்சி ரூ.179 கோடி, ரோகிணி நிலகேணி ரூ.154 கோடியை நன்கொடையாக வழங்கி பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
சிவ நாடார் வரலாறு: கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், மூலைபொழி கிராமத்தில் சிவசுப்பிரமணிய நாடார், வாமசுந்தரி தம்பதியின் மகனாக ஷிவ் நாடார் பிறந்தார்.
கும்பகோணம், மதுரை, திருச்சியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பிறகு கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.
கடந்த 1967-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். சொந்தமாக தொழில் தொடங்க விரும்பிய அவர் கடந்த 1976-ம் ஆண்டில் எச்சிஎல் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உருவெடுத்து உள்ளது.
தாராள குணம் படைத்த சிலரின் உதவியால் ஷிவ் நாடார் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். இதன்காரணமாக அவர் கல்விக்காக தாராளமாக நன்கொடைகளை வழங்கி வருகிறார். நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் எச்சிஎல் நிறுவனம் செயல்படுகிறது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்த ஷிவ் நாடார், இந்தியா மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.