அபுதாபி: லுலு குழுமத்தின் தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலி. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளில் பிரபலமான தொழிலதிபராக விளங்குகிறார். லுலு குழுமத்தைச் சேர்ந்த லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் அபுதாபி பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டது.
நிறுவனத்தின் 25% பங்குகளை (258 கோடி பங்குகள்) விற்கதிட்டமிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப தேதி முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், 30% பங்குகளை (310 கோடி) விற்கப் போவதாக லுலு நிறுவனம் நேற்று தெரிவித்தது. இதன்மூலம் ரூ.14,468 கோடி திரட்டப்பட உள்ளது.
இது அபுதாபி பங்குச் சந்தையில் இந்த ஆண்டில் ஐபிஓ மூலம் திரட்டப்பட உள்ள அதிகபட்ச தொகையாக இருக்கும். இதற்கு முன்பு என்எம்டிசி எனர்ஜி நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.7,376 கோடி நிதி திரட்டியது.
லுலு ரீடெய்ல் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1.94 திர்ஹம் (ரூ.44) முதல் 2.04 திர்ஹம் (ரூ.47)வரை இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டது. இறுதி விலை நாளை தெரியவரும் எனினும், அதிகபட்ச விலையில்தான் பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது. இதன்படி, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.48,000 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14-ம் தேதிஇந்த நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.