வணிகம்

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏமாற்றமளிக்கும் 2-ம் காலாண்டு நிதி நிலை முடிவுகள், நவ. 7-ல் நடைபெறவுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் பாலிசி கூட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் நிதானமாகவும், லாப நோக்குடனும் செயல்பட்ட தால் இந்திய பங்கு சந்தையில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 309 புள்ளிகள் அதாவது 1.27 சதவீதம் சரிந்து 24,000-க்கும் கீழ் சென்று 23,995 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோன்று, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1.18 சதவீதம் அதாவது 941 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,782 புள்ளிகளில் நிலைகொண்டது. அக்டோபர் 3-ம் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது இதுவே முதல்முறை. நேற்றைய வர்த்தகத்தில் பங்குகளின் விலை கணிசமாக சரிவடைந்ததையடுத்து முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம்கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, சென்செக்ஸ் 420 புள்ளிகள் சரிவடைந்ததற்கு, ரிலையன்ஸ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி சன்பார்மா, டிசிஎஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி பங்குகளின் விலையில் ஏற்பட்ட சரிவே முக்கிய காரண மாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT