கார்பரேட் சாணக்கியா வந்தபோது படிக்கவில்லை. மளமள வென்று அதிகம் விற்கும் புத்தகமாகப் பேசப்பட்டும் என்னை ஏனோ ஈர்க்கவில்லை. மொட்டைத் தலையும் முதுகுப் புறம் காட்டி நிற்கும் கார்ப்பரேட் ஆசாமி அட்டைப் படமும் என்னைக் கவரவில்லை. சாணக்கியண் எனக்கு என்றுமே ஆதர்ஷ சரித்திர புருஷன் அல்ல. அதனால் படிக்காதது நஷ்டமில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
இருந்தும் ராதாகிருஷ்ணன் பிள்ளையின் இரண்டாம் புத்தகமான Chanakya’s 7 Secrets of Leadership படிக்கக் காரணம் அதன் இணை ஆசிரியர் டி. சிவானந்தன். மும்பையின் முன்னாள் காவல் துறை ஆணையாளர்.
அவரைப் பற்றி என்னிடம் சொன்னவர்கள் அவரின் சாதனைகளை நிறையச் சொன்னார்கள்: மகாராஷ்ட்ரா காவல் துறையை சீரமைத்தவர். சட்டம் ஒழுங்கை பெரு நகரில் மீட்டவர். சமூக விரோதிகளை களையெடுத்தவர். உயிரை பணயம் வைத்து கடமை ஆற்றியவர்.
காவல் துறையினரின் பணி மிகவும் சிக்கலானது. முரட்டுக் கரம் கொண்டு இறுக்கினால் மனித உரிமை மீறல்களாகிவிடும். தளர்த்தினால் குற்றங்கள் பெருகும். இந்த இரு நிலைகளுக்கும் இடையில் மிதமான போக்கு என்பது நடைமுறையில் சவாலானது. அப்படி ஒரு சவாலான பணி செய்த ஒரு மூத்த காவல் துறை பிரமுகர் எழுதியது என்றதும் தயக்கம் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.
பல பாலிவுட் படங்களுக்கு இவர் வாழ்க்கை சம்பவங்கள் கருவாக இருந்திருக்கின்றது என்றும் அறிந்தேன். சுவாரசியமான வாசிப்பிற்கு தயாரானேன்.
இது ஒரு தலைமை பற்றிய நிர்வாகவியல் புத்தகம் என்ற அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறது புத்தகம். முதல் புத்தகத்தில் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி புத்தகங்களில் காணப்பட்ட தலைமை பண்புகள் சார்ந்த பாடங்கள் அடங்கியதாகத் தெரிந்தது.
ஒரு மேடையில் முன்னாள் காவல் துறை ஆணையர் தன் அனுபவங்களை பேசக் கேட்கிறார் பிள்ளை. தன் இரண்டாம் புத்தகத்திற்கு இவர் தான் கரு என முடிவு செய்கிறார். தலைவர் பற்றிய சாணக்கியர் கூற்றுக்கு இவர் வாழ்க்கை பொருந்திப் போவதை கவனிக்கிறார். பின்னர் பல காலம் அவரையும் அவர் பணி சார்ந்த பலரையும் நேர்காணல் கண்டு இந்த புத்தகத்தை எழுதுகிறார்.
முதலில் கொஞ்சம் சாணக்கியரை சாம்பிள் பார்ப்போம்.
“ஸ்வாமி, அமத்யா, ஜன்பாதா, துர்க், கோஷா, டண்ட், மித்ர இதி ப்ரக்ரித்யா” (அர்தஷாஸ்த்ரா, 6.1.1)
என்கிற சுலோகம் தான் இந்த மொத்த புத்தகத்தின் சாரம்.
பொருள்: அரசன், அமைச்சன், குடிமக்கள், கோட்டை, கஜானா, படை மற்றும் நண்பன் இவை ஏழும் ஒரு தேசத்தின் முக்கிய அங்கங்கள்.
இன்றைய கார்பரேட் உலகிற்கு இப்படிச் சொல்லலாம்:
அரசன் = நிறுவனத்தலைவன், அமைச்சன்= மேலாளன், மக்கள் = பணியாளர் & வாடிக்கையாளர், கோட்டை= கட்டுமானம், கஜானா = நிதி, படை= குழுவாக செயல் படல். நண்பர்கள்= ஆலோசகர்கள்.
எப்படி ஒரு நிறுவனம் துறை துறையாக இயங்குகிறதோ அது போல தலைவன் இப்படி பகுதி பகுதியாக கவனம் செலுத்த வேண்டும் என்று உதாரணங்களுடன் விளக்குகிறது புத்தகம். சிவானந்தன் அவர்களின் காவல் துறை அனுபவங்கள் தான் ஏழு அத்தியாயங்களுக்கும் வலு சேர்க்கிறது.
காவல் துறையினர் இழந்த நம்பிக்கையை மீட்க இவர் எடுக்கும் வியூகங்களும் செயல்களும் கண்டிப்பாக ‘மாற்ற நிர்வாகத்தில்’(change management) சேர்க்கலாம். அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று அவர்களை வலுப்படுத்த கைப்பேசிகள், மடி கணினிகள் வாங்கி அவர்களை நவீனப்படுத்தியதிலிருந்து, அவர்கள் உட்கார்ந்து தேனீர் அருந்தக்கூட இடம் இல்லை என சிறப்பு சிற்றுண்டி நிலையங்கள் அமைத்தது வரை அனைத்தும் சபாஷ் போட வைக்கிறது.
2 கோடி பேர் வாழும் மும்பையில் வெறும் 42,000 காவல் துறையினர் தான் உள்ளனர். இரு 12 மணி ஷிஃப்டில் வேலை செய்வதால் கிட்டத்தட்ட 2 கோடி பேரை 20,000 பேர் காக்க வேண்டும். அதாவது ஒரு காவல்காரர் 1,000 பேரை பாதுகாக்க வேண்டும். இந்த பின்னணியில் பார்த்தால் காவல் துறையின் சவால் புரியும்.
வெகு சில வருடங்களில் மும்பையின் அனைத்து அமைப்பு சார்ந்த குற்றவாளிகளை அடக்கியது/ நீக்கியதை படித்த போது, கௌதம் மேனன் படத்தை விட விறுவிறுப்பாக இருந்தது. தாணே போலீஸ் பள்ளி மிகச்சிறந்த முயற்சி.
தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சூட்டில் பொது மக்களில் ஒருவர் மீது தவறுதலாக குண்டு பட்டு அவர் இறக்க நேரிடுகிறது. இதை மூடி மறைக்க வாய்ப்புகள் இருந்தும் சிவானந்தன் இந்த சம்பவத்திற்கு தானே முன் வந்து பொறுப்பேற்கிறார். இது சத்தீஸ்கரில் நடக்கும் சம்பவம். அவரின் இந்த நேர்மைக்கு நம்மை ஒரு சல்யூட் போட வைக்கிறது.
நிதி நிர்வாகம், மனித வளம், தொழில் நுட்ப உதவி, வல்லுநர் ஆலோசனை, நீண்ட காலத் திட்டங்கள், பொது ஜனத்திற்கும் காவல் துறைக்குமான உறவு பலப்படுத்தும் முயற்சிகள் என அவரின் அனைத்து நடவடிக்கைகளும் சாணக்கிய ரகசியங்கள் இடையில் நேர்த்தியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இது சிவானந்தன் எழுதிய புத்தகம் என்பதை விட சிவானந்தன் பற்றிய புத்தகம் எனக் கொள்ளலாம். சாணக்கியரை விட சிவானந்தன் தான் மனதில் நிற்கிறார்.
தேவ்தத் பட்னாயக் போன்றோரின் எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு இப்புத்தகம் ஏமாற்றம் தரலாம். மதம், கலாச்சாரம், நிர்வாகம் என தீவிரமான விசாரணைகள் இல்லாமல் மேம்போக்காக உள்ளது குறையாகப் படலாம். ஆனால் ஷிவ் கேரா புத்தகங்கள் பிடித்தவர்களுக்கு இந்த புத்தகம் பிடிக்கலாம்.
நம்ம ஊரில் ஒரு தாடிக்காரர் 2,000 வருடங்கள் முன் நிர்வாகத்திற்கும் நிறைய சொல்லிருக்கிறார். அவரை கடல் நடுவே சிலையாக இடுப்பை ஒடித்து நிற்க வைத்திருக்கிறோம். இதுமட்டுமல்லாமல் உலக மொழிகளில் திருக்குறளை மையமாக வைத்து நிர்வாகம் உட்பட பல நூல்கள் எழுதி வெளியிடலாம்.
ஒரு யோசனைதான்!
gemba.karthikeyan@gmail.com