வணிகம்

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபர் மாதத்தில் மொத்தம் ரூ.1.87 லட்சம் கோடி என்றும், இது ஆண்டுக்கு 8.9 சதவீத அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்றும் நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2023-ல், மொத்த வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்தது. சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் அனைத்தும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை அதிகாரப்பூர்வ தரவு சுட்டிக்காட்டுகிறது.

இதுவரை 2024ல், மொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் அதிகரித்து, ரூ.12.74 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.11.64 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 2.10 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

2023-24 நிதியாண்டில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகமாகும். மார்ச் 2024 இல் முடிவடைந்த நிதியாண்டின் சராசரி மாத வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் சராசரியான ரூ.1.5 லட்சம் கோடியைவிட அதிகம்.

சமீபத்திய ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு, இந்தியாவின் பொருளாதாரம் சாதகமான பாதையில் உள்ளதை காட்டுகிறது. வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் குறைவான இறக்குமதி நடவடிக்கைகளையும் காட்டுகிறது. உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் நிதி ஆரோக்கியம் மற்றும் பொருளாதார மீட்பு முயற்சிகள் நன்றாகவே இருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஜூலை 1, 2017 அன்று நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய நிதியமைச்சரை தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட கூட்டாட்சி அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் ஜிஎஸ்டி வரி விகிதங்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT