புதுடெல்லி: இந்தியாவில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக தங்க கவுன்சிலின் (WGC) இந்திய செயல்பாடுகளின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூறியது: “நடப்பாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோராக உள்ள இந்தியாவில் 2024-ல் தங்கத்தின் தேவை 700 முதல் 750 மெட்ரிக் டன்களுக்கு இடையில் இருக்கும். 2020-க்குப் பிறகான மிகக் குறைந்த அளவு இது. கடந்த ஆண்டு இந்தியாவின் தங்க தேவை 761 டன்னாக இருந்தது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதன் விற்பனை சரிந்துள்ளது. தங்கத்தின் விலை நிலையானதாக மாறும் என வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். பொதுவாக ஆண்டு இறுதியில் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். திருமணங்கள், தீபாவளி, தசரா போன்ற முக்கிய பண்டிகைகளின்போது தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுவதே இதற்குக் காரணம். ஆனால், இந்த ஆண்டு, ஆண்டு இறுதியில் தங்கத்தின் தேவை அதிகரிக்கவில்லை. தங்கத்தின் விலை உயர்வே இதற்குக் காரணம். மாறாக, ஜூலை மாதத்தில் இறக்குமதி வரியை 9 சதவீதமாக மத்திய அரசு குறைத்ததால் அப்போதே பலரும் கொள்முதல் செய்தனர்.
உள்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) 10 கிராமுக்கு ரூ.79,700 ($947) என்ற உச்சத்தை எட்டியுள்ளது. 2023ல் 10 சதவீதத்துக்கும் அதிகமாக விலை உயர்ந்த நிலையில், 2024-ல் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்திய தங்க நுகர்வு 18 சதவீதம் உயர்ந்து 248.3 டன்னாக இருந்தது. முதலீட்டு தேவை 41 சதவீதம் உயர்ந்து, நகைகளின் தேவை 10 சதவீதம் அதிகரித்தது” என்று சச்சின் ஜெயின் தெரிவித்தார்.