மேட்டுப்பாளையம்: தீபாவளிப் பண்டிகையையொட்டி, காரமடையில் கைமுறுக்கு தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் தங்களது சொந்த உணவு மற்றும் பலகார வகைகளுக்கு பெயர் பெற்றுள்ளன. அந்த வகையில் காரமடையில் தயாரிக்கப்படும் கை முறுக்கு தனி சிறப்புடையது. திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போலவே, காரமடை கை முறுக்கிற்கும் ஒரு தனி இடம் உண்டு.
காரமடை பகுதியில் கை முறுக்கு உற்பத்தி என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் ஒரு குடிசைத் தொழிலாகும். தட்டு வடை உடன் இணைந்து கை முறுக்கும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் முறுக்குகள் சுவையால் அனைவரையும் கவர்ந்து வருகின்றன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கை முறுக்கு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியது: ''பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த முறுக்குகள் சுவையால் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. அரங்கநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக, காரமடைக்கு பெயர் பெற்றது கை முறுக்கு மற்றும் தட்டு வடை. தீபாவளியை முன்னிட்டு, புடி முறுக்கு, ஆனியன், பூண்டு, மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான முறுக்குகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், லட்டு, மைசூர்பா, ஜிலேபி போன்ற இனிப்புகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
இத்தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும், விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காரமடை முறுக்குகள் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விற்பனையாகின்றன. தீபாவளி பண்டிகை காலத்தில் மொத்த ஆர்டர்கள் அதிகமாக வருவதால், உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே தயாரிப்பு பணிகளை தொடங்கி விடுகின்றனர்.
தனிச்சிறப்பு வாய்ந்த காரமடை முறுக்குகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதேசமயம், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற சவால்களை இத்தொழில் எதிர்கொண்டு காரமடை முருக்கு இன்னமும் தனித்த அடையாளத்துடன் விளங்குவது குறிப்பிடத்தக்கது'' என்று அவர்கள் கூறினர்.