புதுடெல்லி: தாயகத்தை விட்டு பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்து வரும் நபர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் அன்பான உறவுகளுக்கு உணவு ஆர்டர் செய்யும் அம்சத்தை ஸ்விக்கி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.
இன்றைய டிஜிட்டல் உலகில் நினைத்த நேரத்தில் உணவுகளை ஆர்டர் செய்து, ருசிக்க அனுமதிக்கிறது ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள். இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஸ்விக்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ‘International Login’ என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது ஸ்விக்கி. இந்த அம்சத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள உறவுகளுக்கு உணவு ஆர்டர் செய்யலாம். அதோடு ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் சேவையையும் வெளிநாட்டு பயனர்கள் பயன்படுத்த முடியும். அந்த ஆர்டருக்கான கட்டணத்தை வெளிநாட்டு கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ மூலம் செலுத்தலாம்.
இந்த அம்சம் வெளிநாடுகளில் வசிக்கும் ஸ்விக்கி பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கை என ஸ்விக்கியின் இணை நிறுவனர் பாணி கிஷான் தெரிவித்துள்ளார். அதை இந்த பண்டிகை நேரத்தில் அறிமுகம் செய்வது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட 27 நாடுகளில் உள்ளவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். ஐபிஓ மூலம் முதலீடு திரட்டவும் ஸ்விக்கி முதலீடு செய்துள்ளது.