வணிகம்

தங்கம் விலை ரூ.58,880 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது

செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880-க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுன் விலை ரூ.1,600 அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

கடந்த ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை குறைய தொடங்கினாலும், இந்த நிலை நீடிக்கவில்லை. வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்ததன் எதிரொலியாக, தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.

கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. செப்.25-ம் தேதி ரூ.56,480 ஆக உயர்ந்தது. இடையிடையே சற்று விலை குறைந்தாலும், அக்டோபரிலும் இந்த விலை உயர்வு தொடர்ந்தது. அக்.17-ல் ரூ.57,280, அக்.19-ல் ரூ.58,240, அக்.21-ல் ரூ.58,400, அக்.23-ல் ரூ.58,720 என தொடர்ந்து புதிய உச்சங்களை அடைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ,7,295, ஒரு பவுன் ரூ.58,360-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.65 என பவுனுக்கு ரூ.520 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,360, ஒரு பவுன் ரூ.58,880 என உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 24 காரட் சுத்த தங்கம் விலை ரூ.62,920 ஆக இருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுன் விலை ரூ.1,600 அதிகரித்துள்ளது.

நேற்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. முந்தைய நாள் போலவே ஒரு கிராம் ரூ.107, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,07,000 என்ற விலையே நேற்றும் நீடித்தது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

நகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்கின்றன. தவிர, தீபாவளி பண்டிகை, முகூர்த்த நாட்கள் காரணமாக பொதுமக்கள் தங்க நகைகளை அதிகம் வாங்குவதும் விலை உயர்வுக்கு காரணம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT