கோவை: கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு உற்பத்தித் துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் சராசரி (8.33 சதவீதம்) அளவை ஒட்டியே போனஸ் வழங்கப்படுவதாகவும், பல நிறுவனங்கள் நெருக்கடி காரணமாக தீபாவளிக்கு ஒரு பகுதி, பொங்கலுக்கு ஒரு பகுதி என போனஸை பிரித்து வழங்கி வருவதாகவும் தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
தொழில் நகரான கோவை மாவட்டம் ஜவுளி, ஆட்டோ மொபைல் உதரி பாகங்கள், பம்ப்செட், வார்ப்படம், கிரைண்டர், பொறியியல் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தொழில் நிறுவனங்களில் நெருக்கடி நிலவுவதால் சராசரி அளவை (8.33 சதவீதம்) ஒட்டியே போனஸ் வழங்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தொழில்துறையினர் கூறியது: "ஜவுளித் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் சர்வதேச சந்தை விலையை விட இந்திய சந்தையில் மூலப்பொருட்கள் விலை அதிகமாக உள்ளது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் தொழில் நிறுவனங்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனைக் கருத்தில் கொண்டு சராசரி அளவை ஒட்டி இவ்வாண்டு போனஸ் வழங்கப்படும். பல ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்கள் தீபாவளிக்கு ஒரு பகுதி, பொங்கலுக்கு ஒரு பகுதி என போனஸ் தொகையை பிரித்து வழங்கி வருகின்றனர்" என்று தொழில் துறையினர் கூறினர்.
கடந்த ஆண்டு சில நிறுவனங்களில் 14 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பெரும்பாலான நிறுவனங்களில் சராசரி அளவில் (8.33 சதவீதம்) போனஸ் பட்டுவாடா செய்யப்படுவது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளாடும் ஜவுளித் தொழில்! - இதுகுறித்து ஜவுளித் தொழில் துறையினர் கூறும்போது, "‘டெக்ஸ்டைல் சிட்டி’ என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் தீபாவளி போனஸ் வழங்குவதில் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் 1980, 1990 காலக்கட்டங்களி்ல் மிகவும் தாராளம் காட்டின. அப்போது மாத ஊதியம், போனஸ் உள்ளிட்ட சலுகைகள் பல மடங்கு அதிகம் வழங்கப்பட்டதால் அரசுப் பணிக்கு நிகராக ஜவுளித் தொழில் நிறுவன பணி கருதப்பட்டது. ஆனால், காலப் போக்கில் பல நூற்பாலைகள் மூடப்பட்டு இன்று ஒரு ஷிஃப்ட் நடத்துவதே மிகுந்த சவாலாக மாறியுள்ளது. இருப்பனும் சராசரி அளவில் போனஸ் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்” என்று தொழில் துறையினர் கூறினர்.