திருச்சி: திருச்சி - அபுதாபி இடையில் வாரம் 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் அக்டோபர் 25-ம் தேதி முதல் முற்றிலும் ரத்து செய்ய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் திருச்சி - அபுதாபி இடையே விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது. வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த இந்த விமான சேவை வளைகுடா நாடுகளுக்கு சென்று வரும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
திருச்சி மட்டுமின்றி மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மங்களூரு, லக்னோ உட்பட மொத்தம் 13 இந்திய நகரங்களிலிருந்து அபுதாபிக்கு விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில், ஒரு சில நிர்வாக காரணங்களால், அக்டோபர் 25 -ம் தேதி முதல் திருச்சி - அபுதாபி இடையே இயக்கப்படும் 4 விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சென்று வரும் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 1 என இருந்ததை கரோனாவுக்குப் பின்னர் 3 சேவைகளாக உயத்தியது. அதேசமயம் இண்டிகோ நிறுவனம் வாரம் 4 சேவைகளை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக இயக்கி வந்தது. திருச்சியிலிருந்து இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து விமானங்களிலும் இருக்கைகள் நிரம்பும் நிலையில் திடீரென அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த முடிவு வளைகுடா நாடுகளுக்கிடையே தொழில் வர்த்தகத்தையும் பாதிக்கும் என விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முகவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.