வணிகம்

சென்னையில் 2 நாட்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தீபாவளி சிறப்புச் சந்தை

ம.மகாராஜன்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் தீபாவளி சிறப்புச் சந்தை 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் மற்றும் 3-ம் வார சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், இயற்கை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாதத்துக்கான இயற்கை சந்தை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார சனி, ஞாயிற்றுக்கிழமைக் கிழமைகளில் தீபாவளி சிறப்புச் சந்தையாக நடைபெறவுள்ளது.

இதில், மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், திண்டுக்கல் சின்னாளப் பட்டு, மதுரை சுங்குடிச் சேலைகள், சேலம் இளம்பிள்ளை சேலைகள், விருதுநகர் காட்டன் புடவைகள், அரியலூர் வாரியங்காவல் காட்டன் புடவைகள், கோவை நெகமம் சேலைகள், நாமக்கல் வேஷ்டி சட்டைகள், திருப்பூர் டீ சர்ட்டுகள், திருநெல்வேலி, தென்காசியில் தயாரிக்கப்படும் நைட்டிகள், ஈரோட்டில் தயாரிக்கப்பட்ட போர்வைகள், துண்டுகள் உள்ளிட்ட அனைத்து வகை துணிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்றவையும், மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்களும் இந்த இயற்கை சந்தையில் இடம்பெறும். காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த இயற்கை சந்தையை வாடிக்கையாளர்கள் இலவசமாக அணுகி தேவைப்படும் பொருட்களை வாங்கிச் செல்லுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT