வணிகம்

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை: பவுனுக்கு ரூ.360 அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று (அக்.16) ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரு.360 அதிகரித்து ஒரு பவுன் ரூ.57,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியது. ஆனால், இந்த விலை குறைவு நீடிக்கவில்லை.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கடந்த 16-ம் தேதி (செப்.16) ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், இன்று (அக்.16) ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரு.360 அதிகரித்து ஒரு பவுன் ரூ.57,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.

இதற்கு சர்வதேச பொருளாதார நிலவரங்களே காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி வகித்தை 0.5 சதவீதம் குறைத்திருப்பதால் பொதுமக்கள் தங்களது வங்கி வைப்பு நிதியை அதில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் விற்பனை குறைந்துள்ளது, சீன பங்குச்சந்தை சலுகைகளையும் தாண்டி அவர்கள் முதலீட்டுக்காக தங்கத்தை நாடுதல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உள்நாட்டிலும் பண்டிகை, முகூர்த்த காலங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.7,500 வரையும், ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் வரையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT