நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சவாலான இலக்கு என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். அரசாங்கம் இந்த இலக்கை அடையலாம், தேவைப்பட்டால் இன்னும் கூட குறைக்கலாம். ஆனால் எப்படி இந்த இலக்கை அடைவது என்பதுதான் முக்கியம் என்றார் அவர்.
2013-14ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை (அரசின் வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி) 4.5 சதவீதமாக இருந்தது. அரசாங்கம் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க முடியும். அதேபோல செலவுகளைக் குறைப்பதன் மூலமும் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க முடியும். எப்படி என்பதுதான் முக்கியம்.
வருமானத்தை அதிகரிப்பதில் இன்னும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதை அதிகப்படுத்தி நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
வளர்ச்சியைப் பற்றி பேசும் போது கடந்த சில மாதங்களாக நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றார். ஆனால் விவசாயத் துறையில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் பருவமழை குறைந்ததுதான் இதற்கு காரணம் என்றார். மேலும் நடப்பு நிதி ஆண்டில் 5.5 சதவீத வளர்ச்சி சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
மேலும் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் விஷயங்களை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். நீண்ட கால நோக்கத்தில் முன்னுரிமை கடன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்களுடனான சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
கடனுக்கான வட்டிக் குறைப்பு மட்டுமல்லாமல் நம்முடைய அமைப்பில் பல விஷயங்களை நாம் செய்யவேண்டி இருக்கிறது என்று அவர் கூறினார்.
ரொக்க கையிருப்பு விகிதம், எஸ்.எல்.ஆர் போன்ற தடைகள் குறித்து தங்களது கவலைகளை வங்கிகள் தெரிவித்திருக்கின்றன. இப்போது எஸ்.எல்.ஆர் விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருந்த நிதி சந்தைக்கு வரும். கடனுக்கான தேவை அதிகரிக்கும் போது வங்கிகள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். அதே சமயம் அரசாங்க பத்திரங்களில் சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பும் அவசியம் என்று தெரிவித்தார்.
பங்குச்சந்தை குறித்து பேசிய போது, இந்திய சந்தை வளர்ந்து வருகிறது. உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், வங்கிகள் தவிர்த்து, பென்ஷன் பண்ட்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களது முதலீட்டை செய்யலாம் என்று அவர் கூறினார்.
ஆனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை அதிகரிக்கக் கூடுமே என்பது குறித்து கேட்டதற்கு, ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் உள்நாட்டு சூழ்நிலைகளை பொறுத்தே இருக்குமே தவிர வளர்ந்த நாடுகளின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து இருக்காது என்றார்.