காஞ்சிபுரம்/சென்னை: தொழில் வளர்ச்சியின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என்று சிஸ்கோ நிறுவன திறப்பு விழாவில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிஸ்கோ நிறுவனம் ஃபெளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொலைதொடர்புக்கு தேவையான எல்க்ட்ரானிக்ஸ் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிஸ்கோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சக் ராபின்ஸ் தலைமை தாங்கினார்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிஸ்கோ நிறுவன செயல் துணைத் தலைவர் ஜீது பட்டேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த தொடக்க விழாவில் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசியது: தொழில் வளர்ச்சியின் உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாகும். அது நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதற்கு தொலைத் தொடர்பு தொழில் துறையும், அதைச் சார்ந்த தொழில் நிறுவனங்களும் உறுதுணையாக இருக்கும். உலக அளவில் தலைச் சிறந்த தொலைத் தொடர்பு சாதனங்களை இந்தியாவில் சிஸ்கோ நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுனத்தின் பிரிவை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “உலக அளவிலான பொருளாதாரத்தை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உற்பத்தி பொருட்கள், தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளின் மையமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. குறிப்பாக எல்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்றார்.
சிஸ்கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக் ராபின்ஸ் கூறும்போது, “கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் வர்த்தகத்தில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது” என்றார். இந்த விழாவில் அந்நிறுவனத்தின் முக்கிய அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள 5ஜி டெஸ்ட்பெட் ஆய்வகத்தை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று பார்வையிட்டார். அதன்பின் அவர் பேசியதாவது:
உலகில் 5ஜி தொழில்நுட்பத்தை அதிகவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. தொடர்ந்து 6 ஜி தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகம் செய்வதில் முன்னோடியாக இந்தியா திகழும்.
சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் கல்விக்கு பின்பு வாழ்க்கையை தொடங்கும்போது, படித்த நிறுவனத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ள வகையில் பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வின்போது சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.